IND vs AUS, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மார்ஷ்; அரைசதம் விளாசிய வார்னர், ஸ்மித், லபுஷாக்னே - இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வர்னர் 32 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர்.
அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 96 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்களை எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்னஸ் லபுஷாக்னே தனது அரைசதத்தை பதிவுசெய்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினார்.
அதன்பின் 72 ரன்கள் எடுத்திருந்த மார்னஸ் லபுஷாக்னேவும் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.