IND vs AUS, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 டி20 போட்டிகளில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இத்தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம் போல் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 21 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ஜித்தேஷ் சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அக்ஸர் படேல் தனது பங்கிற்கு ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.
அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேலும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஜோஷ் பிலீப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிலீப் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - பென் மெக்டர்மோட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17 ரன்கள் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் சிக்சர்களாக விளாசிய பென் பென் மெக்டர்மோட் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காக போராடிய நிலையில் 5 சிக்சர்களுடன் 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மேத்யூ ஷார்ட் 16 ரன்களுக்கும், பென் துவார்ஷூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என முகேஷ் குமாரின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் மேத்யூ வேட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கைவசம் 3 விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 22 ரன்களை எடுத்திருந்த கேப்டன் மேத்யூ வேட் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்ட முடியாததால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.