இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 டி20 போட்டிகளில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இத்தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம் போல் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 21 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ஜித்தேஷ் சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அக்ஸர் படேல் தனது பங்கிற்கு ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. 

அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேலும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News