IND vs AUS, 2nd Test: மேஜிக் நிகழ்த்திய அஸ்வின், தூண்களை இழந்து தடுமாறும் ஆஸி!

Updated: Fri, Feb 17 2023 11:47 IST
IND vs AUS: Ashwin On Top As Usman Khawaja Shines Alone For Visitors; Score 94/3 At Lunch (Image Source: Google)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன்  பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். 

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைந்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், மேத்யூ குன்னமேன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் -உஸ்மான் கவாஜா இணை களமிறங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 15 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கவாஜா - மார்னஸ் லபுசாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .

ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலிமையான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, அஸ்வினின் பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், உலக டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் மார்னஸ் லபுசாக்னே 18 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை அடித்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 50 ரன்களுடனும, டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை