இந்தியாவில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அஸ்வின்!

Updated: Fri, Mar 10 2023 19:51 IST
IND vs AUS: Incredible effort against Australia sees Ashwin overtake Kumble!
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றும் மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றும் இருக்கின்றது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி உஸ்மான் கவஜா சதத்துடன் நேற்று நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து இன்று உஸ்மான் கவஜா, கேமரூன் கிரீன் இருவரும் தொடர்ந்து விளையாடி ஆஸ்திரேலியா அணிக்கு இரட்டை சத பார்ட்னர்ஷிப்பை வழங்கினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இளம் வீரர் கேமரூன் கிரீன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்துப் பிரமாதப்படுத்தினார்.

ஆஸ்திரேலியா மிகப்பெரிய ரன்களை குவிக்க இருந்த நிலையில் பந்துவீச்சுக்கு வந்த அஷ்வின் அடுத்தடுத்து கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க் என மூன்று விக்கட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு முயற்சிக்கு தடையை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்து எஞ்சிய மூன்று விக்கட்டுகளில் இரண்டு விக்கட்டுகளை அஷ்வினே கைப்பற்றி மொத்தம் ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவஜா 180 ரன்கள் ஆஸ்திரேலியா தரப்பில் குவித்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருக்கிறது!

இன்று அஷ்வின் ஆறு விக்கட்டுகளை கைப்பற்றியதையடுத்து உள்நாட்டில் 26 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். அஸ்வின் இதை 55 டெஸ்ட் போட்டிகளில் செய்திருக்கிறார். உலகளவில் இந்த சாதனையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். உலகளவில் முத்தையா முரளிதரன் 45 முறை உள்நாட்டில் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

அஷ்வின் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இன்று அஷ்வின் படைத்திருக்கிறார். அஷ்வின் 7,019 பந்துகள், நாதன் லயன் 6,998 பந்துகள், கும்ப்ளே 6516 பந்துகள் என்று முதல் மூன்று இடத்தில் இருக்கிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை