பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா? இந்திய அணியின் விளக்கம்!

Updated: Fri, Feb 10 2023 12:16 IST
Image Source: Twitter

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியா டாப் பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சுருட்டி எடுத்துள்ளார். 22 ஓவர்கள் வீசிய ஜடேஜா 8 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

இந்நிலையில் இந்த போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா 120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போது ஜடேஜா பந்துவீச வந்தார். அப்போது பந்து வீசும் முன் திடீரென முகமது சிராஜிடம் சென்ற ஜடேஜா, அவரின் கைகளில் இருந்து ஏதோ ஒரு திரவியத்தை எடுத்து தனது விரல்களில் பூசிக்கொண்டார்.

இடதுகை பவுலரான ஜடேஜா எந்தெந்த விரல்களில் பந்தை டேர்ன் செய்கிறாரோ அங்கு மட்டும் அதனை தடவிக்கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி பந்தை சேதப்படுத்தினாரா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர் ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை போட்டி நடுவர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். காணொளியும் பார்க்கப்பட்டுள்ளது. அப்போது ஜடேஜா கையில் தடவியது ஒரு வகையான வலி நிவாரண மருந்து தான் என்றும், விதிகளை எதுவும் மீறவில்லை என்றும் இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது.

இதனால் ஜடேஜா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக பந்துகள் கைகளில் இருந்து வழுக்கி கொண்டு செல்லாமல் இருக்க, கிரிப்பிற்காக திரவியங்களை பயன்படுத்துவார்கள். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்று தான். ஒருவேளை ஜடேஜா அதுபோன்று கிரிப்பிற்காக செய்திருந்தாலும், எந்த தவறும் இல்லை என வல்லுநர்கள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து ட்வீட் போட்டுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், “ஜடேஜா தனது விரலில் என்ன பூசிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இதுபோன்று பார்த்ததே கிடையாது” என பதிவிட்டுள்ளார். இதனால் புதிய விஷயத்தை எதையோ ஜடேஜா பயன்படுத்துகிறாரா?, அவர் செய்தது சரிதானா என்ற கோணத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை