அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. நாக்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை அஸ்வின் 36 ரன்களுக்கு அவுட்டாக்கி வெளியேற்றினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450ஆவது விக்கெடாகவும் அமைந்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
அஸ்வினின் இந்த சாதனையை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான மைல்கல்” என தமிழில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஷ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.