BAN vs IND 1st Test: நங்கூரமாய் நிற்கும் வங்கதேச வீரர்கள்; பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் ஷுப்மன் கில் மற்றும் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தினர். இது ஷுப்மன் கில்லிற்கு டெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனால் முன்னிலை ரன்களுடன் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2ஆவது இன்னிங்க்சில் விளையாடிய 3ஆவது நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில் களமிறங்கிய வங்கதேச அணி அந்நாள் முடிவில் 12 ஓவர் சந்தித்து விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதங்களைப் பதிவுசெய்ய, அவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியாது. முதல் இன்னிங்ஸில் படுமட்டுமாக சொதப்பிய இருவரும் இந்த இன்னிங்ஸில் விஸ்வரூபமெடுத்து விளையாடி வருகிறார்கள். இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் தள்ளாடி வருகிறது.
இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் ஸகிர் ஹசன் 55 ரன்களுடனும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 64 ரன்களுடனும் நங்கூரம் போல களத்தில் உள்ளனர். இதனால் இன்னும் 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணி அடுத்த செஷனைத் தொடங்கவுள்ளது.