BAN vs IND, 1st Test: ஏமாற்றிய கோலி, ராகுல்; அதிரடி காட்டும் ரிஷப் பந்த்!

Updated: Wed, Dec 14 2022 11:23 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் கேல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே நிதானா ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை, அவ்வபோது பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

பின் 20 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில், தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, சற்று நேரத்திலேயே கேல் ராகுல் 22 ரன்களுக்கு கலித் அஹ்மத் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் புஜாராவுடன் இணைந்து விராட் கோலி அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் வெறும் ஒரு ரன்னில் தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சிகொடுத்தார். இதனால் 50 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த தொடங்கினார். அதிலும் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசி எதிரணி வீரர்களுக்கு பயத்தைக் கட்டினார். அவருக்கு துணையாக புஜாரா வழக்கம் போல் தனது தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 29 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களோடும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை