இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து, வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது. குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைத்தானத்தில் இத்தொடரின் முதல் டி20 போட்டியானது தொடங்கவுள்ளது. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.
அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கலும் அறிவிக்கப்பட்டதுடன், இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே இதுவரை 14 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் வங்கதேசம் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ஜூன் 22, 2024 அன்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். அதன்படி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சஹால் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரராக தீபக் சாஹரின் பெயரில் உள்ளது. அவர் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேசமயம் வங்கதேச அணி தரப்பில் இந்தியாவிற்கு எதிராக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக வேகப்பந்து வீச்சாளர் அல்-அலீம்-உசேன் உள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
அவர் இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்களுடன் 477 ரன்களைக் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் வீரர் ஷிகர் தவான் 10 போட்டிகளில் 277 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் வங்கதேச அணி தரப்பில் சபீர் ரஹ்மான் இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடுத்த வீரராக உள்ளார். அவர் 6 போட்டிகளில் விளையாடி 236 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச டி20 அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், தாவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், ஜாகர் அலி, மெஹ்தி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷாத் ஹுசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.