இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டனாது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 209 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அஹ்மத், சோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் சதமடித்து கைகொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவாறவே இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 104 ரன்களைச் சேர்த்தார்.  இங்கிலாந்து தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 399 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 29 ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் ரெஹான் அஹ்மத் 23 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் களமிறங்கிய ஒல்லி போப் 23, ஜோ ரூட் 16 ரன்கள் என ஆட்டமிழக்க, 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலியும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  அவரைத்தொடர்ந்து 26 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவும் தனது விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இதையடுத்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான த்ரோவால் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் ஃபோக்ஸ் - டாம் ஹார்ட்லி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 55 ரன்களைச் சேர்த்தனர். 

அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களை எடுத்திருந்த பென் ஃபோக்ஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் சோயப் பஷீர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் 5 பவுண்ட்ரி, ஒரு சிக்சர் என 36 ரன்களை எடுத்திருந்த நிலையில் டாம் ஹார்ட்லியும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இந்திய அணி தாப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன்செய்தும் அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News