பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் இணை யாரும் எதிர்பாரத தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிலும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரது பந்துவீச்சை துவம்சம் செய்து விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த குஷால் புர்டெல் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிம் ஷார்க்கி, கேப்டன் ரோஹித் பௌடல், குசால் மல்லா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிஃப் ஷேக் தனது 10 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இருப்பினும் அவரும் 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குல்சன் ஜாவும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த திபிந்திர சிங் ஐரி - சோம்பால் கமி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆட்டம் காட்டினர், பின் ஐரி 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கட்ட சோம்பால் கமி 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.