நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

Advertisement

இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்து ஆட்டழிந்தது. இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.  அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் என விக்கெட்டி இழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் சர்ஃபராஸ் கானுடன் இணைந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாட இந்திய அணியும் முன்னிலை நோக்கி முன்னேறியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் சர்ஃப்ராஸ் கான் 18 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 150 ரன்னிலும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 99 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக நான்காம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் இன்று தொடங்கிய் 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணியில் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் இணைந்த டெவான் கான்வே - வில் யங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் நிதானமாக விளையாடி வந்த டெவான் கான்வே 17 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து வில் யங்குடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். பின்னர் அவருக்கு துணையாக வில் யங்க்கும் பவுண்டரிகளை அடிக்க நியூசிலாந்தின் வெற்றியும் உறுதியானது. 

இறுதியில் நியூசிலாந்து அணியானது 27.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில் யங் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 45 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிபெற செய்தனர். இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றதுடன், 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News