இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
மேலும் இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்ஷல் படேல் அறிமுக வீரராக களமிறங்கினார். அதேசமயம் நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோர் களமிறங்கினர்.
அதன்படி முதலில் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - டேரில் மிட்செல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சிக்சர் மழை பொழிந்த கப்தில் 31 ரன்கள் எடுத்து தீபாக் சஹாரிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் 24 ரன்களிலும், டேரில் மிட்செல் 31 ரன்னிலும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மேலும் இன்றைய போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருந்த சமயத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
Also Read: T20 World Cup 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.