IND vs NZ, 3rd ODI: ரோஹித், கில் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 386 டார்கெட்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மா, 1100 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதமடித்தார். 74 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் கில் சதமடித்தார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதமடித்த கில், இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதில் ரோஹித் - கில் ஆகிய இருவருமே சதமடித்து முதல் விக்கெட்டுக்கு 26.1 ஓவரில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களுக்கும், கில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய விராட் கோலி - இஷான் கிஷான் இணையும் அதிரடி காட்ட தொடங்கினர். ஆனால் இதில் 17 ரன்கள் எடுத்த இஷான் கிஷான் தேவையில்லாமல் ரன் அவுட்டாக, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் 27 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 14 வாஷிங்டன் சுந்தர் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா - ஷர்தூல் தாக்கூர் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 25 ரன்களில் ஷர்துல் தாக்கூர் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளைர் டிக்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.