சதமடித்து சாதனைப் படைத்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!

Updated: Wed, Feb 01 2023 21:45 IST
IND vs NZ, 3rd T20I: Shubman Gill Breaks Virat Kohli Record! (Image Source: Google)

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அஹமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் வெறும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ராகுல் திரிபாதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், டி20 போட்டிகளுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என பெரும்பாலான முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஷுப்மன் கில், இந்த போட்டியில் தன் மீதான அனைத்து விமர்ச்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தேவைக்கு ஏற்ப சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அசால்டாக விளாசிய ஷுப்மன் கில் 54 பந்துகளில் சதம் அடித்து, சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்தபின்பும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத ஷுப்மன் கில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மொத்தம் 64 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 234 ரன்கள் குவித்துள்ளது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் சதம் அடித்த ஷுப்மன் கில், ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்று வடிவங்களிலும் சதமடித்த 5ஆவது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்சா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ளனர்.

மேலும் இன்றைய போட்டியில் 126 ரன்களை எடுத்ததன் மூலம், இந்திய அணி தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோரையும் ஷுப்மன் கில் பதிவு செய்து சாதனைப் படைத்தார். இப்படி பல்வேறு சாதனைகளும் படைத்த ஷுப்மன் கில்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ரசிகர்கள் பலர் ஷுப்மன் கில்லை, விராட் கோலியுடன் ஒப்பிட்டு வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை