IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 147 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களையும், ரிஷப் பந்த் 60 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இந்திய அணி 263 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யாங் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அஜாஸ் படேல் 7 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் அஜாஸ் படேல் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் அகாஷ் தீப்பிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதனால் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி தொடரை இழந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket