IND vs SA, 2nd T20I: சூர்யா, கோலி, ராகுல் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!

Updated: Sun, Oct 02 2022 20:53 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை  முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. கடந்த போட்டியில் நிதான ஆட்டத்தை கையாண்ட இந்திய அணி இப்போட்டியில் அதற்கு மாறாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து பந்துவீச்சாளர்களை மிரட்டி வருகிறது. 

அதிலும் கடந்த போட்டியில் டெஸ்ட் போட்டியைப் போன்று விளையாடிவந்த கேஎல் ராகுல், இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இதன்மூலம் இந்த அணி அதிக முறை 50+ பார்ட்னர்ஷிப்பை கடந்த இணை என்ற சாதனையையும் படைத்தது.

பின்னர் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 57 ரன்களை எடுத்திருந்த கேஎல் ராகுலும் கேஷவ் மஹாராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை மிரளவைத்தனர். அதிலும் இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் அதற்கான விளக்கத்தை தனது பேட்டிங்கின் மூலம் காட்டினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் சூர்யகுமார் படைத்தார். 

பின்னர் அதுவரை களத்தில் நிதானமாக இருந்த விராட் கோலியும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதன்மூலம் இந்த இணை 42 பந்துகளில் 100 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர்.

மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் சேர்த்த நிலையில் அவரப்பட்டு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 49 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 17 ரன்களையும் சேர்த்திருந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை