மைதானத்தில் திடீர் விசிட் அடித்த பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. கடந்த போட்டியில் நிதான ஆட்டத்தை கையாண்ட இந்திய அணி இப்போட்டியில் அதற்கு மாறாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து பந்துவீச்சாளர்களை மிரட்டி வருகிறது.
அதிலும் கடந்த போட்டியில் டெஸ்ட் போட்டியைப் போன்று விளையாடிவந்த கேஎல் ராகுல், இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இதன்மூலம் இந்த அணி அதிக முறை 50+ பார்ட்னர்ஷிப்பை கடந்த இணை என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில், இப்போட்டியின் 7ஆவது ஓவரின் முடிவுக்கு பின் ஆடுகளத்தின் நடுவே அழையா விருந்தாளி ஒருவர் எண்ட்ரி கொடுக்க, மொத்த மைதானமும் அதிர்ச்சியில் உறைந்தது. ஆம், களத்தினுள் பாம்பு ஒன்று எண்ட்ரி கொடுக்கவே, அதைக்கண்ட வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அதன்பின் மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தில் நுழைந்து பாம்பினை பத்திரமாக மீட்டுச்சென்றனர். இதனால் இப்போட்டி சற்று நேரம் தாமதமானது குறிப்பிடத்தக்கது.