IND vs SL, 3rd ODI: விராட் கோலி, ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கு!

Updated: Sun, Jan 15 2023 17:28 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரிகள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி இணை எதிரணி பந்துவீச்சாளர்களை தங்களது அபாரமான பேட்டிங்கால் திணறவைத்தனர். இதில் ஒருமுனையில் விராட் கோலி அரைசதத்தைக் கடக்க, மறுமுனையில் ஷுப்மன் கில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 116 ரன்களில் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களையும் அடித்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 46ஆவது சதத்தைப் பதிவுசெய்து ரசிகர்களுக்கு விருந்துபடைத்தார். மேலும் இத்தொடரில் அவர் விளாசும் இரண்டாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சதத்திற்கு பின் அதிரடியாக செயல்பட்ட விராட் கோலி பவுண்டரி மழை பொழிந்தார். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திருபினார். அவரைத் தொடர்ந்து வந்த கேஎல் ராகுலும் அதிரடியாக விளையாட முயற்சித்து 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 106 பந்துகளில் தனது 150 ரன்களைக் கடந்து அசத்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி 110 பந்துகளில் 13 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 166 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை