இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரராக தில்சன் மதுஷங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷுப்மன் கில் 70 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மாவும் 83 ரன்களோடு நடையைக் கட்டி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் 4ஆம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 28, கேஎல் ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 14 ரன்கள் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி எதிரணி பந்துவீச்சை சிதறடித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 45ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 87 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 113 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி கசுன் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.