IND vs SL, 2nd Test (Day 1): இலங்கை பேட்டிங்கை சரித்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இலங்கை தரப்பில் லசித் எம்புல்டெனியா, பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடைசி செஷனில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் விக்கெட்டுக்களை இழந்தனர்.
அதிலும் அந்த அணியின் குசால் மெண்டிஸ் 2, கேப்டன் திமுத் கருணரத்னே 4, லஹிரு திரிமானே 8, தனஞ்செய டி சில்வா 10, சரித் அசலங்கா 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.