IND vs WI: இந்திய அணி ஷாருக் கான், சாய் கிஷோர் சேர்ப்பு!
இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. வரும் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இந்தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய ஒருநாள் மற்றும் டி20 தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் சாதாரண வீரராக விளையாட உள்ளார்.
மேலும் இந்த அணியில் இளம் வீரர்கள் ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா போன்றருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ருதுராஜ் கெய்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள வேளையில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் இந்த அணியில் ஸ்டாண்ட் பை அதாவது காத்திருப்பு வீரர்களாக சேர்க்க பட்டுள்ளார்கள்.
இந்த தொடரின் போது இந்திய அணியில் உள்ள ஏதேனும் ஒரு சில வீரர்களுக்கு கரோனா தொற்று அல்லது காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் இடத்தில் விளையாட இந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “பிசிசிஐ அனைத்து அடிப்படை விஷயத்தையும் முழுமையாக்க விரும்புகிறது. 3ஆவது அலை இன்னும் தொடர்வதால் ஷாருக் கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சாய் கிஷோர் வலைப்பயிற்சிக்கு ஒரு நல்ல பவுலர்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் வளர்ந்து வரும் வீரர்களாக இருக்கும் இவர்களில் ஷாருக் கான் ஒரு பினிஷெராக காணப்படுகிறார். குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி 5 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் விளாசி தமிழகத்திற்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.
அதன்பின் நடைபெற்ற விஜய் ஹசாரே ஒருநாள் தொடரிலும் அதிரடியாக பேட்டிங் செய்த இவர் 186 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை விளாசியிருந்தார். மறுபுறம் வளர்ந்து வரும் சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் சாய் கிஷோர் சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகளையும் விஜய் ஹசாரே கோப்பையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் தேர்வு குழுவினரின் கவனம் ஈர்த்த இவர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட் பை வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். அத்துடன் இவர்கள் இந்திய அணியில் இணைய உள்ளதால் விரைவில் தொடங்க உள்ள ரஞ்சி கோப்பைக்கான தமிழக அணியில் இவர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரியவருகிறது.