ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!

Updated: Wed, Feb 28 2024 14:08 IST
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. 

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

அதன்படி டெஸ்ட் பேட்டர்களுக்கான தவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றனர். இதில் இந்திய அணிக்கெதிராக சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் டாப் 10 இடத்தில் இருந்த ஒரே இந்திய வீரரான விராட் கோலி இரண்டு இடங்கள் பின் தங்கி 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும், இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் அவர் தனது அதிகபட்ச உட்சத்தை தொட்டுள்ளார். ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் பின் தங்கி 13ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர்த்து நான்காவது டெஸ்ட்டில் அசத்திய ஷுப்மன் கில், துருவ் ஜுரெல் ஆகியோரும் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர். 

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-இல் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இதில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 6ஆம் இடத்திலும் நீடித்து வருகின்றன. இவர்களைத் தவிர்த்து நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தையும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றன. நான்காவது டெஸ்ட்டில் சதமடிதத இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மூன்று இடங்கள் முன்னேறியதுடன் நான்காம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். அடுத்த சில தினங்களில் பல்வேறு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்த பட்டியளில் மேலும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை