யு19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணியை பந்தாடி இந்திய அணி இமாலய வெற்றி!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் ஜப்பான் அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அண்டர்19 அணிக்கு ஆயுஷ் மத்ரே - வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மத்ரேவுடன் இணைந்த அண்ட்ரே சித்தார்த்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் ஆயுஷ் மத்ரே தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதன்பின் 54 ரன்னில் ஆயுஷ் மத்ரே விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே சித்தார்த் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த கேப்டன் முகமது அமான் மற்றும் கார்த்திகேயா இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 4அவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியதுடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களில் கார்த்திகேயா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த நிகில் குமார் 12 ரன்னிலும், ஹர்வன்ஷ் சிங் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதற்கிடையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் முகமது அமான் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் இருந்த அமான் 7 பவுண்டரிகளுடன் 122 ரன்களையும், அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ஹர்திக் ராஜ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அண்டர்19 அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களைச் சேர்த்தது. ஜப்பான் அணி தரப்பில் ஹ்யூகோ கெல்லி மற்றும் கீஃபர் யமமோட்டோ-லேக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜப்பான் அணிக்கு ஹ்யூகோ கெல்லி மற்றும் நிஹர் பர்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிகர் பர்மர் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோஜி ஹார்ட்கிரேவ் அபே ரன்கள் ஏதுமின்றியும், கசுமா கடோ 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். தேசமயம் மறுபக்கம் தொடக்க வீரராக களமிறங்கிய ஹ்யூகோ கெல்லி நிதானமாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனால் இப்போட்டியில் 111பந்துகளை எதிர்கொண்ட அவர் 50 ரன்களில் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய சார்லஸ் ஹின்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் ஜப்பான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சேட்டன் சர்மா, ஹர்திக் ராஜ், கார்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய யு19 அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பான் யு19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.