முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் முன்னேறின. நேற்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் சாம்ம்பியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு காம்ரன் அக்மல் - சர்ஜீல் கான் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் சர்ஜீல் கான் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மக்சூத் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான காம்ரன் அக்மலும் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் யுனிஸ் கானும் 7 ரன்களுடன் வெளியேறி ஏமாற்றத்தைக் கொடுத்தார். பின்னர் இணைந்த சோயப் மாலில் - மிஸ்பா உல் ஹக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

ஆனால் இதில் மிஸ்பா உல் ஹக் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற, அடுத்து வந்த அமெர் யாமினும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய சோயப் மாலிக் 3 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா - அம்பத்தி ராயூடு இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ராபின் உத்தப்பா 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ராயுடுவுடன் இணைந்த குர்கீரத் சிங் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு தனது அரைசதத்தையும் பதிவுசெய்த நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து 34 ரன்கள் எடுத்த நிலையில் குர்கீரத் சிங்கும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் யுவராஜ் சிங் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய யூசுஃப் பதான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 16 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் யுவராஜ் சிங் 15 ரன்களையும், இர்ஃபான் பதான் 5 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

இதன்மூலம் இந்தியா சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸை வீழ்த்தி லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்த அம்பத்தி ராயுடு ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய யுசுஃப் பதான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News