ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியாவின் நிலை!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை பொறுத்து வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்திலும் இருந்தன. 3ஆம் இடத்தில் இலங்கையும், 4ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன.
இந்திய அணி முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 2-1 என வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. 3-0 3-1 என வென்றால் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். அந்தவகையில், மிக முக்கியமான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நாக்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(120) மற்றும் ஜடேஜா(70), அக்ஸர் படேலின்(84) அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது.
பின்னர் 223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிப்பதுடன், இந்திய அணியின் வெற்றி விகிதமும் 58.93லிருந்து 61.67 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய அணி 2ஆம் இடத்தில் தான் உள்ளது. ஆனால் வெற்றி விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்திய அணியின் வெற்றி விகிதம் அதிகரித்துள்ள அதேவேளையில், இந்த தோல்வியின் விளைவாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றி விகிதம் 75.56லிருந்து 70.83 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணிக்கும்(61.67%), 3ஆம் இடத்தில் உள்ள இலங்கைக்கும் (53.33%) இடையே சுமார் 19% வித்தியாசம் இருப்பதால், இந்த தொடரில் இந்திய அணி ஒன்று அல்லது 2 வெற்றிகளை பெற்றால் இறுதிப்போட்டிக்கு கண்டிப்பாக இந்திய அணி முன்னேறிவிடும். இப்போதே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.