இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்து. இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியது. அதன்பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகிய இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் மூலம் அறிவித்தார். இதனையடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இருப்பினும் அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் கௌதம் கம்பீரின் ஆக்ரோஷமும் வெற்றி மனப்பான்மையும் இந்தியாவுக்கு உதவும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரெட் லீ, “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வழிநடத்தியதுடன் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்ததே அதற்கு சிறந்த உதாரணமாகும்.
அவர் எப்போதும் தனது விளையாட்டில் முதலிடம் வகிக்கிறார். அவர் தனது வீரர்களை அணிதிரட்டவும் தனது அணியை ஒன்றிணைக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். அது ஒரு திடமான கட்டமைப்பை உருவாக்குகிறது. அவர் ஒரு சிறந்த வீரராக இருந்து வருகிறார், அவரது ஆக்ரோஷமும் வெற்றி மனப்பான்மையும் இந்தியாவுக்கு உதவும். ஒரு வீரராக சர்வதேச அளவிலும் அவர் பிரகாசித்துள்ளார்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருப்பதால், இந்தியா அணியானது தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளதாக நினைக்கிறேன். மேற்கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்ததுடன் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ராகுல் டிராவிட்டிற்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய கௌதம் கம்பீர், 58 டெஸ்ட், 147 ஒருநாள், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இறுதிப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.