ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!

Updated: Sun, Mar 10 2024 13:40 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

இதன்மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 122 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து சத்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 

முன்னதாக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து ஐசிசியின் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணியாக சாதனை படைத்துள்ளது. அதன்படி ஒருநாள் அணிகள் தரவரிசையில் 121 புள்ளிகளுடனும், டி20 அணிகள் தரவரிசை பட்டியலில் 266 புள்ளிகளுடனும் இந்திய அணி முதல் இடத்த தக்கவைத்துள்ளது. இருப்பினும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை எவ்வளவு நாள் தக்கவைக்கும் என்பது சுவரஷ்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி தனது அடுத்த டெஸ்ட் தொடரை வங்கதேசத்திற்கு எதிராக செப்டம்பர் மாதம் தான் விளையாடவுள்ளது கவனிக்கத்தக்கது. 

 

அதேசமயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 68.51 சதவீதத்துடன் முதல் இடத்தில் தொடர்கிறது. மேலும் இப்பட்டியலில் நியூசிலாந்து அணி 60 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், 59.09 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றன. இதனால் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி முதல் இடத்தை தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை