குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும் - பார்த்தீவ் படேல்
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்..
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார், ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாக இப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஷர்தூல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் கவனத்தை ஈர்க்க தவறிவுள்ளனர். இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் வீரர் பார்த்தீப் படேல் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி பேட்டிங்கை அணுகியது போலவே, நம்பிக்கையுடன் வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய பந்து வீச்சாளர் தேவைப்படும். தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு கலவையில், குல்தீப் யாதவ் எதிரணிக்கு அழுத்ததைக் கொடுப்பதுடன் விக்கெட் எடுப்பவராகவும் நம்பிக்கை அளிக்கிறார்.
எனவே அந்தக் கண்ணோட்டத்தில், இந்தியா அவரைச் சேர்க்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது நடக்கிறதோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும் என்பது என் கருத்து” என்று கூறியுள்ளார். முன்னதாக இத்தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட குல்தீப் யாதவிற்கு நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது தற்சமயம் பேசுபொருளாக மாறி வரும் நிலையில், பார்த்தீவ் படேலின் கருத்தானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள குல்தீப் யாதவ் அதில் 5 ஐந்து விக்கெட் ஹாலுடன் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இப்போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.