சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்ல வேண்டாம் - ஹீதர் நைட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா.
நடுவர் அவுட் எனத் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறியுள்ளார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய தீப்தி சர்மா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சார்லி டீன் விவகாரம் பற்றி கூறுகையில், “சார்லி டீன் பந்துவீசும் முன்பு அடிக்கடி கிரீஸை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவரைப் பலமுறை எச்சரித்தோம். பிறகு நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். அதற்குப் பிறகும் அவர் அப்படிச் செய்ததால் விதிமுறைப்படி ரன் அவுட் செய்தோம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தீப்தி சர்மா அளித்த பேட்டிக்கு இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் பதிலளித்துள்ளார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஹீதர் நைட் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக எமி ஜோன்ஸ் கேப்டனாகச் செயல்பட்டார்.
இந்நிலையில் தீப்தி சர்மாவின் பேட்டிக்கு ஹீதர் நைட் பதிலளித்துள்ள அவர், “ஆட்டம் முடிந்து விட்டது. முறைப்படி சார்லி டீன் ஆட்டமிழந்துள்ளார். இந்த ஆட்டத்திலும் தொடரிலும் வெல்ல தகுதியான அணி இந்தியா. ஆனால் (சார்லி டீன் விவகாரத்தில்) எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. அவர்கள் அதை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதனால் சார்லி டீனின் விக்கெட்டை முறைப்படி எடுக்கவில்லை என ஆகிவிடாது. ஆனால் ரன் அவுட் செய்தது சரியென்றால் எச்சரிக்கை குறித்து பொய் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த வேண்டியதில்லை” எனக் கூறியுள்ளார்.