ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சர்துல் தாக்கூர் வெளியே போக, சூரியகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இருவர் உள்ளே வந்தார்கள். நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

Advertisement

வேகப் பந்துவீச்சுக்கு ஆரம்பத்தில் சாதகமான சூழ்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே ரன் ஏதும் இல்லாமலும், வில் யங் 17 ரங்களிலும் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். சமி ஓவரில் ரச்சின் ரவீந்தரா கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவற விட்டு அதிர்ச்சி அளித்தார்.

Advertisement

மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இருவரும் அரை சதத்தை தாண்டினார்கள். மீண்டும் முகமது ஷமி பந்துவீச்சுக்கு வந்து ரச்சின் ரவீந்தராவை 75 ரன்களுக்கு வெளியேற்றினார். இந்த ஜோடி 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய டேரில் மிட்சல் சதம் அடித்தார். 35 வது ஓவருக்கு மேல் இந்திய பந்துவீச்சாளர்கள் திரும்பி வந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பதிலடி தர ஆரம்பித்தார்கள்.

டாம் லாதம் 5, பிலிப்ஸ் 23, சான்ட்னர் 1, மேட் ஹென்றி 0, டேரில் மிட்சல் 130, பெர்குசன் 1, போல்ட் 0* என ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்து நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி 10 ஓவர் பந்துவீசி 54 ரன்கள் விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முகமது சமிக்கு இது இரண்டாவது ஐந்து விக்கெட் ஆகும். 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார். மேலும் 48 வருட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை ஐந்து விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையை படைத்திருக்கிறார். வேறு யாரும் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றியது கிடையாது.

Advertisement

இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் கபில் தேவ், ஆஷிஷ் நெக்ரா, வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு முறை உலகக்கோப்பையில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News