ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் இந்திய அணி?
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம்.
மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் இந்திய அணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
ஏனெனில் தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பொறுப்பு வகித்து வருகிறார். தற்சமயம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழல் காரணமாக இந்திய அணி இனி எந்த தொடர்களிலும் பாகிஸ்தானுடன் விளையாடாது என்ற முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் தான் தற்சமயம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களிலிருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதனால் இந்திய அணி இன்றி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக ஹைபிரிட் மாடலில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டன. இதில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தி இருந்தது.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணியின் போட்டிகள் அனைத்து பொதுவான இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இத்தொடரிலும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.