இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் உறுதி!
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 7 அன்று முடிவடைகிறது.
இதற்கடுத்ததாக இந்திய அணியின் அடுத்தச் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹராரே நகரில் ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி விளையாடவுள்ளது. 2016-க்குப் பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்தத் தொடரில் பல இந்திய இளம் வீரர்கள் பங்கேற்பார்கள், விவிஎஸ் லக்ஷ்மண் அணியின் பயிற்சியாளராக இருப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அணியின் கேப்டனாக தவான் அல்லது ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.