டி20 பயிற்சி ஆட்டம்: நார்த்தாம்டன்ஷையரை வீழ்த்தியது இந்தியா!

Updated: Sun, Jul 03 2022 23:22 IST
India win an excellent game of cricket by 10 runs (Image Source: Google)

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. கடந்த சுற்றுப்பயணத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று (ஜூலை1) தொடங்கி நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் முடிந்ததும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

அந்த டி20 தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் விதமாக இந்தியன்ஸ் என்ற பெயரில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் இங்கிலாந்து உள்நாட்டு அணிகளுக்கு எதிராக 2 பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன. டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற 2ஆவது பயிற்சி போட்டியில் நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நார்த்தாம்ப்டன்ஷைர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கும் ராகுல் திரிபாதி, அந்த வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாமல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவும் டக் அவுட்டானார். இஷான் கிஷன் 16 ரன்னும் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 34 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் இறங்கிய  ஹர்ஷல் படேல், தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஹர்ஷல் படேல் 36 பந்தில் 54 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது இந்தியன்ஸ் அணி.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நார்த்தாம்டன்ஷையர் அணியில் ரிகார்டோ 5 ரன்னிலும், கேப்டன் ஜூசுவா கோப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எமிலியோ 22 ரன்னிலும், சாய்ஃப் ஸாய்ப் 33 ரன்களோடும் பெவிலியன் திருபினர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.3 ஓவர்களிலேயே நார்த்தாம்டன்ஷையர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை