Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!

Updated: Thu, Sep 21 2023 12:29 IST
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி! (Image Source: Google)

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாலமாக நடைபெற்று வருகிறது. அதில் நீண்ட வருடங்கள் கழித்து முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கியுள்ளனர். அத்தொடரில் தற்போது முதலாவதாக மகளிர் போட்டிகள் நடைபெறும் நிலையில் இன்று ஹங்கொழு நகரில் முதல் காலிறுதி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக விளையாட தகுதி பெற்ற இந்திய அணியை முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்து வந்த மலேசியா அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் இந்த போட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக அத்து மீறி நடந்துக்கொண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஐசிசி விதித்த தடையால் விளையாடவில்லை.

அதனால் தற்காலிகமாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்துகிறார். மேலும் மழையால் தாமதமாக தொடங்கிய இப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் மந்தனா 5 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பவுண்டரிகளை அடித்து விரைவாக ரன்களை சேர்த்தார். அவருடன் அடுத்ததாக வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஷஃபாலி 4 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த ரிச்சா கோஸ் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் விளாச, மறுபுறம் ஜெமிமா ரோட்ரிகஸ் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 15 ஓவரில் இந்தியா 173 ரன்கள் எடுக்க மலேசியா சார்பில் மஸ் எலிசா, இஸ்மாயில் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 15 ஓவரில் 177 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசியா 0.2 ஓவரில் 1/0 ரன்கள் மட்டுமே எடுத்த போது வந்த மழை போட்டியை மொத்தமாக ரத்து செய்தது.

அப்போது மலேசியாவை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவித்ததன் காரணமாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். மேலும் நாளை நடைபெறும் 4ஆவது காலிறுதி போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங்காங் மோதுகின்றன. அப்போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா செப்டம்பர் 24ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை