இந்திய ரசிகர்களை இனரீதியாக சீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!

Updated: Tue, Jul 05 2022 12:42 IST
Image Source: Google

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களையும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் குவித்தது. 

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 245 ரன்களில் ஆல் அவுட்டாக தற்போது 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

அதன் படி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 259 ரகளை குவித்துள்ளதால் மேலும் 119 ரன்கள் இன்று அடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் முதல் மூன்று நாட்கள் வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி நான்காம் நாளான நேற்று தங்களது அருமையான வலுவான இடத்தினை இந்த போட்டியில் இருந்து தவறவிட்டது என்று கூற வேண்டும்.

ஏனெனில் இரண்டாவது இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் இன்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று இந்திய வீரர்கள் அவசரப்பட்டு ஆட்டம் இழந்ததும், அதனை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் தற்போது அவர்களது ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை இங்கிலாந்து ரசிகர்கள் இனரீதியாக திட்டியதாக இந்திய ரசிகர்கள் பலரும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரானது தற்போது அதிக அளவு வைரலாகி உள்ளதால் மைதானத்தில் நேற்றைய நான்காவது போட்டியின் போது மைதானத்தின் காவலர்களாக இருந்த பாதுகாப்பாளர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உடனடியாக இந்திய ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு மதிப்பு அளித்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. 

அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியான அறிக்கையின்படி, “நாங்கள் இந்த போட்டியில் இந்திய ரசிகர்கள் இனரீதியாக கேலி செய்யப்பட்டதை அறிந்தோம். அதோடு இது குறித்த புகார்களையும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

கட்டாயம் இந்திய ரசிகர்களை நோகடித்த நபர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். கிரிக்கெட்டில் இனவெறியோ, நிற வெறியோ இருக்கக் கூடாது அனைவரும் சமம் என்பதனால் இந்த விசயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை