IND vs SL, 1st ODI: ஷனகாவின் ரன் அவுட் சர்ச்சை குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!

Updated: Tue, Jan 10 2023 22:54 IST
Indian skipper Rohit Sharma explaining his withdrawal of appeal against Shanaka! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இன்று அஸாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 83 ரன்கள் கில் 70 ரன்கள் விராட் கோலி 113 ரன்கள் எடுக்க ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷங்கா 72 ரன்கள், தனஞ்செய டி சில்வா 42 ரன்கள், கேப்டன் சனகா 108 ரன்கள் சேர்த்த நிலையிலும் மற்ற வீரர்கள் சோபிக்காததால், 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா அணிதரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் சனகாவின் சதத்திற்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை வீசிய முகமது ஷமி, சனகா பந்துவீச்சு முனையிலிருந்து கிரீஸ் தாண்டி செல்லும் பொழுது பந்தை ஸ்டெம்பில் அடித்தார். ஐசிசி விதிமுறைப்படி அந்த நேரத்தில்  சனகா ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவோ அவுட் ஆப்பிலை வாபஸ் பெற்று, ஷனகாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இது இணையத்தில் பேசுபொருளானது.

இதுகுறித்து வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் நன்றாக தொடங்கினோம். இவ்வளவு பெரிய ரன்களை குவிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் பங்களித்தால் மட்டுமே முடியும். மற்ற பேட்ஸ்மேன்கள் வந்து தைரியமாக ரண்களை குவிக்க ஆரம்பத்தில் அருமையான மேடை அமைக்கப்பட்டது. நாங்கள் இன்னும் கொஞ்சம் பந்து நல்ல முறையில் வீசி இருக்கலாம் என்று நினைக்கிறேன். 

 

பனி பிற்பகுதியில் குறைவாக இருந்த பொழுதும் கூட பந்துவீச்சு குறித்து நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. நாங்கள் ஒரு யூனிட் ஆக சிறப்பாகவே பந்து வீசினோம். இதுபோன்ற ஆட்டங்களில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

முகமது ஷமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியாது. சனகா 98 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் அவரை அந்த மாதிரி ரன் அவுட் முறையில் வெளியேற்ற விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான முறையிலேயே அவரை ஆட்டம் இழக்க வைக்க முயற்சி செய்தோம்” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை