உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் - முகமது கைஃப்!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிலும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என முன்னணி அணிகள் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகின்றன.
அதன்படி ஆஸ்திரேலிய அணி இந்தியாவிலும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்திய அணி வலிமையாக இருப்பதாகவும், அதனால் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள முகமது கைஃப், “இந்தியா ஒரு நல்ல வலுவான அணியைக் கொண்டிருப்பதாலும், முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியதாலும், இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது. இது சில காலத்திற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது, ஆனால் வெற்றி பெறவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தேர்வில் சிறந்த 11 பேரை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரோஹித் ஒரு சிறந்த கேப்டன். அவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணி தேர்வில் சந்தேகம் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.