டி20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

Updated: Wed, Nov 02 2022 14:51 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரண்டாவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளதால் எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் பேட்டிங் வரிசையில் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலியுடன் சூரியகுமார் யாதவ் மட்டுமே அட்டகாசமான ஃபார்மில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். 

எப்படி போட்டாலும் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் சூர்யகுமார் யாதவை ரசிகர்களும் வல்லுனர்களும் இந்தியாவின் ஏபிடி என கொண்டாடும் நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 6 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவர் மளமளவென குறைந்த போட்டிகளிலேயே தரவரிசையில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி முதலிடத்தில் இருந்த முகமது ரிஸ்வானுக்கு போட்டியளித்து வந்தார். 

அதில் தொடக்க வீரராக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ரிஸ்வானை விட அழுத்தமான மிடில் ஆர்டரில் களமிறங்கி மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணிகளை வெளுத்து வாங்கி வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் சூரியகுமார் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தார்கள். குறிப்பாக 2022 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ரிஸ்வானை மிஞ்சினார். 

மேலும் இந்த உலகக் கோப்பையில் முகமது ரிஸ்வான் மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இதர இந்திய வீரர்கள் திணறிய போது தனி ஒருவனாக 68  ரன்கள் குவித்து காப்பாற்றியது உட்பட சிறப்பான செயல்பாடுகளை சூரியகுமார் வெளிப்படுத்தி வருகிறார். அதனால் தற்போது புதிதாக ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசையில் முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் உலகின் புதிய நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேற்றம் கண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் 842 புள்ளிகளை கொண்ட ரிஸ்வானை விட 863 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தொட முடியாத உச்சத்திற்கு சூர்யா சென்றுள்ளார். அவருடைய அடுத்த இலக்கு இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து சாதனை படைத்துள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை