INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; முதல் நாளிலேயே 410 ரன்களை குவித்து சாதனை!

Updated: Thu, Dec 14 2023 18:47 IST
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; முதல் நாளிலேயே 410 ரன்களை குவித்து சாதனை! (Image Source: Google)

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 17 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சுபா சதீஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 69 ரன்களில் சுபா சதீஷும், 68 ரன்களுக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய யஸ்திகா பாட்டியா - தீப்தி ஷர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்தனர். அதன்பின் யஸ்திகா பாட்டியா 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்நே ராணா 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்திரேகர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் லாரன் பெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த மகளிர் அணி என்ற பெருமையை பெற்றது இந்திய மகளிர் அணி.

அத்துடன் 1934க்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 400 ரன்களுக்கும் மேல் குவித்த இரண்டாவது அணி என்ற வரலாற்று சாதனையை செய்தது இந்திய மகளிர் அணி. 1934 ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 44 ரன்களில் ஆல் - அவுட் ஆன நிலையில், அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாளின் முடிவில் 431 ரன்கள் குவித்தது. அதை அடுத்து தற்போது இந்திய மகளிர் அணி ஒரே நாளில் 410 ரன்கள் குவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை