INDW vs AUSW, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், பெர்ரி, மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி யில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணி நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடிக்கவில்லை.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிச்சா கோஷ் 21 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் யஷ்திகாவுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்திகா பாட்டியா 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்தது களமிறங்கிய தீப்தி சர்மா 21 ரன்களிலும், அமஞ்ஜோத் கவுர் 20 ரன்களிலும், ஸ்நே ரானா ஒரு ரன்னிலும் என சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த பூஜா வஸ்திரேகரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டிற்கு 63 ரன்களைச் சேர்த்து உதவினர். பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 82 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த பூஜா வஸ்திரேகர் 39 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை களத்தில் இருந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 75 ரன்களில் எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்க, 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 78 ரன்களை எடுத்திருந்த லிட்ச்ஃபீல்டும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பெத் மூனி - தாஹிலா மெக்ராத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்ததுடன் 68 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.