INDW vs AUSW, Only Test: போராடும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி இந்தியா!

Updated: Sat, Dec 23 2023 18:44 IST
INDW vs AUSW, Only Test: போராடும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி இந்தியா! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி  மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முந்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர் 4 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்களை குவித்தது. 

ஆதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தீப்தி சர்மா 70 ரன்களுடனும், பூஜா வஸ்திரேகர் 33 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் தீப்தி சர்மா 78 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பூஜா வஸ்திரேகர் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 406 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரபில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகளையும், கிம் கார்த், சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி - லிட்ச்ஃபீல்ட் இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, 33 ரன்களில் பெத் மூனியும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - தாஹிலா மெக்ராத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எல்லிஸ் பெர்ரி 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த தாஹிலா மெக்ராத்தும் 73 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி தனது பங்கிற்கு 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் அனபெல் சதர்லேண்ட் 12 ரன்களுடனும், ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஸ்நே ரானா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை