தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது.
அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லாரா வோல்வார்ட் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இணைந்த மரிஸான் கேப் - தஸ்மின் பிரிட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தஸ்மின் பிரிட்ஸ் 40 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய மரிஸான் கேப் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், மரிஸான் கேப் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய டிரையானும் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஸ்மின் பிரிட்ஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் மற்றும் பூஜா வஸ்திரேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷஃபாலி வர்மா 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ஸ்மிருதி மந்தனா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதனைத்தொடர்ந்து அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே தயாளன் ஹேமலதாவும் 14 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 87 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, இந்திய அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் கடைசி ஓவரில் இந்திய மகளிர் அணி வீராங்கனைகளால் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன், இந்த சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.