இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீராங்கனை கியானா ஜோசப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ஹீலி மேத்யூஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

Advertisement

இதன்மூலம் இந்திய வீராங்கனை ரேணுகா தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில், அடுத்து களமிறங்கிய டியாண்டிரா டோட்டினும் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரேணுகா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஷமைன் கம்பெல் - சினலே ஹென்றி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்தனர்.

இதில் சினலே ஹென்றி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமைன் கம்பெல்லும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸைதா ஜேம்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில் மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த சின்னலே ஹென்றியும் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அலீயா அலீன் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News