ஐபிஎல் திருவிழா 2021: முதல் வெற்றிக்கு போராடும் ஹைதராபாத்; வெற்றியைத் தக்கவைக்க முனையும் பெங்களூரு!

Updated: Wed, Apr 14 2021 12:21 IST
IPL 2021: Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad match preview (Image Source: Google)

ஐபிஎல் தொடர் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் முதல் போட்டியில் இருந்தே கடைசி ஓவர் வரை சென்று அணியின் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பிலேயே ரசிகர்களை வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன.

இத்தொடரின் முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி மும்பையை வீழ்த்தில் அசத்தல் வெற்றி பெற்றதோடு, வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் அணியும் கொல்கத்தா அணிக்கெதிரான முதல் போட்டியில் 10 ரன்களில் தோல்வியைத் தழுவியது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆர்சிபி அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோருடன் கரோனாவிலிருந்து மீண்டுள்ள தேவ்தத் படிகல் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

பந்துவீச்சில் ஹர்சல் பட்டேல், கெய்ல் ஜெமிசன், கிறிஸ்டியன் என டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டுகள் அணியில் இருப்பது எதிரணி வீரர்களுக்கும் கடும் சவாலாக அமையக்கூடும். சுழற்பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை.

தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள கோலி தலைமையிலான ஆர்சிபி அணி தனைத் தக்கவைத்துக் கொண்டு தொடர் வெற்றிகளைப் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கேகேஆர் அணிக்கெதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிலும் வார்னர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

மிடில் ஓவர்களில் மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவ், அப்துல் சமத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் மற்ற வீரர்கள் ஜொலிக்கத் தவறியது அணியின் தோல்விக்கான காரணமாக உள்ளது.

பந்துவீச்சில் சிறந்த அணிகளில் ஒன்றான ஹைதராபாத் அணிக்கு புவனேஷ்வர், நடராஜன், ரஷித் கான் மட்டுமே பக்க பலமாக இருந்து வருகின்றனர். தங்களுக்கு உள்ள சவால்களை சமாளித்து ஹைதராபாத் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நேருக்கு நேர்

பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 10 முறை ஹைதராபாத் அணியும், 7 முறை பெங்களூரு அணியும் வெற்றிபெற்றுள்ளன.

உத்தேச அணி

ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், ராஜட் படிதர், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கெய்ல் ஜெமிசன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ஹோல்டர், விஜய் சங்கர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை