ஐபிஎல் 2021: டூ பிளேசிஸ், கெய்க்வாட் அதிரடி; கேகேஆர் பவுலர்களை பந்தாடிய சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வார், பாப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதிலும் கடந்த சில போட்டிகளாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், இன்றைய போட்டியில் எதிரணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அரைசதம் கடந்து அசத்தியது. பின்னர் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மொயீன் அலியும் தந்து பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய எம்.எஸ்.தோனியும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 220 ரன்களை குவித்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாப் டூ பிளேசிஸ் 95 ரன்களுடன் களத்தில் இருந்தார்.