இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று - கேஎல் ராகுல்
ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினார்கள்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல் 49 (33) ரன்களும், மயங்க் அகர்வால் 67 (43) ரன்களும் சேர்த்து முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 120 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருந்தது. அடுத்து மார்க்கரம் 26 (20), பூரன் 32 (22) ஆகியோர் ரன்களை சேர்த்ததால், கடைசி ஓவரில் வெற்றி பெற 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ஆனால் கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்தார். மிகவும் பிரஷரான அந்த ஓவரில் ஒரு ரன்னை மட்டும் விட்டுக்கொடுத்து பூரன், ஹூடாவின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்து கார்த்திக் தியாகி அசத்தினார். இதனால் இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 183 ரன்கள் சேர்த்து, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கடைசி வரை வெற்றி பெற்றுவிடுவோம் என ஜாலியாக இருந்த பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் பேரிடியாக இருந்தது. முக்கியமாக ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடி கொடுத்த கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் கே.எல்.ராகுல், "இந்த தோல்வி ஜீரணிக்கவே முடியாத விஷயம். இதற்கு முன் இதேபோல ஒருமுறை தோற்றிருந்தோம். அதிலிருந்து நாங்கள் இன்னும் பாடம் கற்கவில்லை எனத் தோன்றுகிறது. இப்போட்டியை 18ஆவது ஓவரிலேயே முடித்துவிடுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆட்டம் மாறிவிட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சில சமயங்களில் இயல்பான ஆட்டத்தை ஆடாமால், அனைத்து பந்துகளையும் தூக்கியடிக்க முயற்சிப்பார்கள். அப்போது ரன்கள் கிடைக்கவில்லை என்றால், பதற்றம்தான் ஏற்படும். கடைசி ஓவரில் அந்த தவறை செய்ததே, விக்கெட்களை பறிகொடுக்க காரணமாக அமைந்தது. இதை அனைத்தையும் மறந்துவிட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். விக்கெட்களை வீழ்த்துவதுதான் டி20 கிரிக்கெட்டில் முக்கிய அம்சம். ஒரு விக்கெட் ஆட்டத்தையே திருப்பி போட்டுவிடும். அது இந்த போட்டியில் நிரூபனம்" என்று தெரிவித்துள்ளார்.