ஐபிஎல் 2022: தடுமாறிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய திலக் வர்மா!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனில் படுமோசமாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ளன.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகேஷ் சௌத்ரி.
பேபி ஏபி என்றழைக்கப்படும் இளம் அதிரடி வீரர் டிவால்ட் ப்ரீவிஸை தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 3ஆவது ஓவரில் வீழ்த்தினார் முகேஷ் சௌத்ரி. அதன்பின் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மிட்செல் சாண்ட்னரிடம் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து வந்த ஹிருத்திக் ஷோகீன் - திலக் வர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தியது. ஆனால் 25 ரன்கள் எடுத்திருந்த ஷோகீன், டுவைன் பிராவோவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாட முயர்சித்து 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 5 ரன்களில் டேனியல் சாம்ஸும் நடையைக் கட்டினார்.
ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த திலக் வர்மா 42 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.