ஐபிஎல் 2022: சதமடித்து மிராட்டிய டி காக்; ஆதரவாக நின்ற கேஎல் ராகுல்!
ஐபில் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 66ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
நவி மும்பையிலுள்ள டி ஓய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
மேலும் இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் எவின் லூயிஸ், மனன் வோரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும், கொல்கத்தா அணியில் அபிஜித்தும் இடம்பெற்றனர்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் - குயிண்டன் டி காக் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதன்மூலம் இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து கேகேஆர் அணி வீரர்கள் விக்கெட் எடுக்க முயற்சிக்க, சற்றுப்பொருட்படுத்தாமல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயிண்டன் டி காக் 59 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மேலும் ஐபிஎல் தொடரில் இது அவருக்கு இரண்டாவது சதமாகும்.
அதன்பின் டிம் சௌதி வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் சிக்சருக்கு பறக்கவிட, அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் குவிண்டன் டி காக் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி மிரளவைத்தார்.
அதனைத்தொடர்ந்து 20ஆவது ஓவரை வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஓவரையும் டி காக் விட்டுவைக்கவில்லை. அந்த ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இதன்மூலம் லக்னோ அணி 200 ரன்களையும் கடந்தது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைக் குவித்த ஜோடி எனும் சாதனையை குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இணை படைத்தது.
மேலும் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயிண்டன் டி காக் 140 ரன்களையும், கேஎல் ராகுல் 68 ரன்களையும் சேர்த்தனர்.